டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சீனாவின் இந்த ஊடுருவல் முயற்சி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இருசபைகளிலும் எழுப்பினர். இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் அத்துமீறல் தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக இருசபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். சீனாவின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றை கோரிக்கை. இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ராஜ்யசபா தலைவரும் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுத்து மத்திய அரசு அடம்பிடித்து வருகிறது. எல்லையில் என்னதான் நிலைமை என்கிற உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியாத நிலைமை இருக்கிறது. நமது எல்லையில் ஊடுருவும் சீனாவுக்கு பொருளாதார வகையில் தக்க பதிலடியைத் தர ஏன் மத்திய அரசு தயங்குகிறது? நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு விவாதம் நடத்த மறுப்பது என்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும் என்றார்.
பின்னர் நாடாளுமன்றத்தின் இருசபைகளும் கூடின. லோக்சபாவில், சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சபையில் கடும் அமளி நிலவியது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா பேசுகையில், பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு எண்ணிக்கையில் டிரோன்கள் பறந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து 200 டிரோன்கள் பறக்கவிடப்பட்டதால எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு 109 டிரோன்கள் பாகிஸ்தானால் எல்லையில் பறக்கவிடப்பட்டன. ஆகையால் டிரோன்களை அழித்தொழிக்கும் கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்தினார்.
சீனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீனா ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. நாங்கள் ஒன்றும் ராணுவ ரகசியங்களை கேட்கவில்லையே. சீனாவின் ஊடுருவலை ஏன் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை? சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொள்ள எங்கிருந்துதான் தைரியம் கிடைத்தது? என்பதுதான் எங்கள் கேள்வி என்றார்.
Leave a Reply