கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி திருமணம் நடத்துவது என இரு வீட்டு பெற்றோராலும் பேசி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண பத்திரிகைகள் அடித்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் வாலிபர், தனது வருங்கால மனைவியுடன் மனம் விட்டு பேசுவதற்காக விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் பேசி வந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தனது காதலனை மறக்க முடியாத இளம்பெண், தனக்கு நிச்சயம் செய்த வாலிபர் வாங்கி கொடுத்த செல்போனில் தனது காதலனுடன் பேசி வந்ததும், காதலனை மறக்க முடியாததால் அவருடன் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். மேலும் இளம்பெண் பெற்றோர், மணமகன் வீட்டாரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணமகனின் பெற்றோர் நிச்சயம் செய்த போது அணிவித்த கம்மல், செல்போன் மற்றும் இதர செலவுகளை வழங்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அதன்படி செல்போன் மற்றும் செலவழித்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு அணிவித்த கம்மலை மட்டும் திருப்பித்தர இளம்பெண் வீட்டார் அவகாசம் கேட்டனர். எதற்கு என்று விசாரித்த போது, இளம்பெண் அந்த கம்மலை அடகு வைத்து தான் தனது காதலனை கரம்பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து சமாதானம் அடைந்த மணமகன் வீட்டார் கம்மலை தர அவகாசம் கொடுத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply