அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைக்கக் கூடாது – மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!

சென்னை: கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. விபத்துகள் ஏற்படும்போது மட்டுமே விளம்பர பலகைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த புதுப்பாலம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர் வைக்கப்பட்டிருந்தது. பிளக்ஸ் பொருத்தும் பணியில் சேலத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டிருந்தனர். காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குமார், குணசேகரன், செந்தில் முருகன் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்றுவதற்கு தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. அதேபோல் உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்திற்கு காரணமான பேனர், விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர பலகைகள் வைப்பதை அனுமதிக்கும் தனியார் நிறுவன கட்டிட உரிமையாளர்களையும் எச்சரித்து அறிக்கையிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் தனி நபர், கட்டிடங்கள், நிலங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் ஒருவருட சிறை தண்டனையோ ரூ.5000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனையும் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.