பறவைக் காய்ச்சல் பரவல் எதிரொலி: கோவைக்கு வந்த 500 வாத்து குஞ்சுகளை கேரளாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது..!

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் வாத்துப் பண்ணையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கோவை – கேரளா எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால் கோவையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கப்படுகிறது. கோழி, இறைச்சி, முட்டை, வாத்து மற்றும் கோழி குஞ்சுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக கோழிக் குஞ்சுகளை ஏற்றி வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் இருந்து 500 வாத்து குஞ்சுகளை ஏற்றிக் கொண்டு கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் கோவை நோக்கி வந்த வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதால் சுகாதாரத் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.