பைடன் புடின் பேச்சு தோல்வி: உக்ரைன் தாக்க தயாராகி விட்ட ரஷ்யா.!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடன்- ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கும் அபாயம் அதிகமாகி இருக்கிறது.

தனது அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்ய அதிபர் புடின், அதன் மீது போர் தொடுக்கவும் தயாராகி இருக்கிறார். அந்த நாட்டை சுற்றி ஒரு லட்சம் வீரர்களையும், நவீன ஆயுதங்களையும் குவித்துள்ளார். இதற்கு அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், ரஷ்யா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கான தேதியை ரஷ்யா குறித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாகவே, உக்ரைனில் இருந்து அமெரிக்கர்களை வெளியேறும்படி அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டு இருக்கிறார். இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான கடைசி நேர முயற்சியாக, பைடனும், புடினும் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவி உள்ளது.

உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்ற புடினின் கோரிக்கையை பைடன் நிராகரித்து விட்டார். இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என தெரிகிறது. இதனால், பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த போரில் உக்ரைனக்கு ஆதரவாக அமெரிக்க, நேட்டோ படைகள் ரஷ்யாவை தாக்கினால், அது 3ம் உலகப் போராக மாறும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், மனித இனத்துக்கு பெரும் உயிரிழப்பு ஏற்படும். இப்பிரச்னையை தூதரக ரீதியாக தீர்ப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அதையும் மீறி படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடகளும் இணைந்து, ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தவும் தயார்நிலையில் இருப்பதாக பேச்சுவார்த்தையின் போது புடினிடம் பைடன் எச்சரித்தார்,’ என கூறப்பட்டுள்ளது.