பயணிகளின் கவனத்திற்கு… தமிழ்நாட்டின் முக்கிய ரயில்களில் ஏசி பெட்டிகள் அதிகரிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான லிஸ்ட்டினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தென்னக ரயில்வேயை பொறுத்தவரை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகிறது.. கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மக்களின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றார்போல், ரயில்களில் ஏசி பெட்டி, 2ம் வகுப்பு, ரிசர்வேஷன் பெட்டி, முன்பதிவில்லா பெட்டி என இருக்கிறது. இந்நிலையில், நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் வருவாயை அதிகளவு ஈட்டும் நோக்கில், ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது.. இதற்காகலே 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து நீண்டதூரத்திற்கு இயங்கும் 8 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்ட் இதுதான்:

மன்னார்குடி-பகத் கி கோதி எக்ஸ்பிரசில் (22674, 22673) வரும் 24ம் தேதி முதல் 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரண்டடுக்கு ஏசி பெட்டி-1, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3 இணைக்கப்படுகிறது. ராமேஸ்வரம்-ஓஹா எக்ஸ்பிரசில் (16733, 16734) வரும் 28ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்-மங்களூரு எக்ஸ்பிரசில் (16347, 16348) வரும் 25ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும், மங்களூரு-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரசில் (12620, 12619) வரும் 26ம் தேதி முதல் ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு, ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியும் இணைக்கப்படுகிறது.

கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரசில் (16614, 16613) வரும் 30ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், கோவை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் (16618, 16617) ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 4 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு, 4 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரசில் (22663, 22664) வரும் 29ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (12667, 12668) வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5 இரண்டாம் வகுப்பு பெட்டியும், ஒரு முன்பதிவில்லா பெட்டியும் நீக்கப்பட்டு, 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பினால், நடுத்தர மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அப்படியானால் மூன்றடுக்கு ஏசி பெட்டியில்தான் பயணிக்க வேண்டுமா? இது சாதாரண கட்டணத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாகிறதே? என்று கலங்குகிறார்கள்.