குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்… தாய் ஆவேச பேட்டி..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஏற்பட்ட பிரச்னையால் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவக் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் பேசியது:

“சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர் விசாரணை நல்லபடியாக முடிந்தது. எந்த தேதியில் எதனால் இந்த பிரச்னை ஆரம்பித்தது என்று கேட்டார்கள் நாங்களும் பதில் அளித்தோம். ஜூன் 29-ஆம் தேதி ஊசி போட்ட பிறகுதான் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டது. அன்றே செவிலியரிடம் நான் சொன்னேன். வலது கை விரலில் கருஞ் சிவப்பாக மாறி இருந்தது. மருத்துவர் மற்றும் செவிலியர் அலட்சியத்தால்தான் என் மகன் வலது கையை இழந்திருக்கிறான். யாரும் இந்த தவறை மறந்துகூட செய்யக்கூடாது. விசாரணை திருப்திகரமாக இருந்தது. அனைவரையும் விசாரித்துவிட்டு பதில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

என் மகனுக்கு நடந்த அநீதி போல் யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும் அதுவரை என் போராட்டத்தை தொடருவேன். எந்த தாயிடமும் குறைமாத குழந்தை என்ற வார்த்தை உபயோகிக்க கூடாது. அமைச்சர் பலமுறை குறைமாத குழந்தை, குறையுடைய குழந்தை என்று தெரிவித்தார். அமைச்சர் வரும்போது மட்டும்தான் அனைவரும் உடனிருந்தார்கள். அதன்பின் யாரும் இல்லை, நான் மட்டும்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட எங்களை வைத்து அதிகாரிகள் பேசவில்லை.

குழந்தையின் தலை 61 சென்டி மீட்டர் இருந்ததாக அமைச்சர் சொன்னார். ஆனால், இன்று (நேற்று) காலை அளவு எடுத்து பார்த்ததில் 53 சென்டி மீட்டர்தான் தலை சுற்றளவு உள்ளது. கடந்த 26-ஆம் தேதி இரண்டு கையுடன் நல்ல நிலையில்தான் என் மகனை கொண்டு வந்தேன். இப்போது என் மகனை ஒற்றைக் கையுடன் பார்க்கிறேன்.” என்று தெரிவித்தார்.