ஆசிய விளையாட்டு!! மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்றது – 100 பதக்கங்கள் அள்ளி இந்தியா அசத்தல்..!!

ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்காம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது வரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம், இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.

போட்டி தொடங்கியது முதலே இந்திய அணியின் கைதான் ஓங்கிய்ருந்தது. முதல் ரெய்டிலேயே பூஜா ஒரு புள்ளியை பெற்றார். தொடர்ந்து 2-0 என முன்னேறிய நிலையில், தைவான் வீராங்கனை பென் ஒரே ரெய்டில் 3 புள்ளிகளை பெற்று அசத்தினார். அடுத்தடுத்த சுற்றுகளில் இரு அணிகளும் கடுமையாக போராட, மாறி மாறி புள்ளிகள் எடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் 7-6 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. அப்போது, ரெய்டிற்குச் சென்ற பூஜா 3 டச் பாயிண்டுகளுடன் ஒரு போனஸ் பாயிண்டையும் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா 11 – 6 என முன்னிலை பெற்றது. அடுத்தடுத்த ரெய்டுகளில் இரு அணிகளும் சீரான இடைவெளியில் புள்ளிகளை பெற்றாலும், இந்திய அணி முன்னிலையிலேயே இருந்தது.

இந்திய வீராங்கனை புஷ்பா ரெய்ட் சென்ற போது டச் பாயிண்ட் கோரினார். வாக்குவாதத்திற்குப் பிறகு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தைவான் ரிவ்யூவிற்கு சென்றது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதேபோன்று போட்டியில் அவ்வப்போது பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தியா – தைவானின் புள்ளிகள் முறையே, 22-22, 24-23, 24-24 என நிலவியது. இதனால், வெற்றி யாருக்கு என்பதிலான பதற்றம் உச்சத்தை தொட்டது. இறுதியில், புஷ்பா அடுத்தடுத்த ரெய்டுகளில் எடுத்த 2 புள்ளிகள் மூலம், இந்திய அணி 26-25 என்ற புள்ளி கணக்கில் தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெல்வது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 2010ம் ஆண்டு குவாங்சோவிலும், 2014ம் ஆண்டு இன்சியானிலும் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 2018ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியா 100 பதக்கங்களை வெல்வது இதுவே முதன்முறையாகும்.