யூடியூபர் TTF வாசன் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து..!!

டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வாகன ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டிருக்கிறார்.

டிடிஎஃப் வாசன் பிரபல யூடிபராக இருந்து வந்தார். பைக் ஸ்டண்டுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த அவர், அண்மையில் காஞ்சிபுரம் அருகே பைபாஸில் பைக் ஸ்டண்ட் செய்யும்போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அவருக்கு உயிருக்கு ஆபத்தாகும் பெரிய அளவிலான அடி ஏதும் படவில்லை. கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவை பார்க்கும்போது மக்க நடமாட்டம் மிகுந்த சாலையில், வேண்டுமென்றே டிடிஎஃப் வாசன் பைக் ஸ்டண்ட் ஈடுபட்டது தெரியவந்தது. லட்ச ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவர் அந்த மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் உடனடியாக டிடிஎஃப் வாசனை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் அவரை பின் தொடர்வதால், இது சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தனர். அத்துடன் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையிலேயே வாகனங்கள் இயக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த காஞ்சிபுரம் நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தான் உடன்படுவதாகவும், தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திலும் டிடிஎஃப் வாசன் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், தற்போது டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 2033 அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டிடிஎஃப் வாசனின் நண்பரான அஜீஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..