அரவிந்த் கெஜ்ரிவால் – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சந்திப்பு.!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன..

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிற மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நாளை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

நாளை தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ள அதே வேளையில், அவரது நண்பர் கமல்ஹாசனையும் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணையும் முயற்சியாக ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்திலும் ஆம் ஆத்மி இடம்பெறும் என தகவல் கூறப்படுகிறது.

அதன்படி, அந்த ஆலோசனை கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளும் பட்சத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மத்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஜனநாயக விரோத ‘டெல்லி எதிர்ப்பு’ அவசரச் சட்டத்துக்கு எதிராக திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக நாளை தமிழக முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.