கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு.!!

மாநிலக் கல்லூரியில் மட்டும் 40 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பதிவு..

மிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் கலந்தாய்வு துவக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் முதல் கட்ட கலந்தாய்வும், 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் 2ஆம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்பட்டு, ஜூன் 22ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54,638 விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர்வதனால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளத்தின் முகவரியில் கடந்த மே 8ஆம் தேதி காலை முதல் மே 22ஆம் தேதி வரையில் மாணவர்கள் பதிவு செய்தனர். மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விபரங்கள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அந்த கல்லூரிகள் குறித்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் மையத்தின் தொடர்பு எண்கள் எழுதி வைக்கப்பட்டன. ஒரு விண்ணப்பத்தில் மாணவர்கள் 5 கல்லூரியில் உள்ள எத்தனைப் பாடப்பிரிவிற்கும் விண்ணப்பபிக்க முடியும்.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 22 ஆம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தினர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 274 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்திருந்தனர். மேலும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 54 ஆயிரத்து 638 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதனைத்தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாகவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிகாம் பொதுப் பாடப்பிரிவிற்கு அதிகப்பட்சமாக மாநிலக் கல்லூரியில் சேர்வதற்கு 11,604 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

 மாநிலக் கல்லூரியில் பிஏ தமிழ் பாடப்பிரிவில் சேர 9,410 பேரும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவிற்கு 8,229 பேரும், கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 8 ஆயிரத்து 3 பேரும், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 7,599 பேரும், மயிலாப்பூர் ராணிமேரிக் கல்லூரியில் பிகாம்(பொது)பாடத்திற்கு 7,006 பேரும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 6,887 பேரும், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு பிஏ தமிழ் பாடத்திற்கு 6,719 பேரும், மாநிலக் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு 6,717 பேரும், சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ தமிழ் பாடப்பிரிவில் சேர்வதற்கு 6,570 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாநிலக் கல்லூரியில் உள்ள 1,140 இடங்களில் சேர்வதற்கு 40 ஆயிரத்து 30 பேரும், கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1,433 இடங்களில் சேர்வதற்கு 34 ஆயிரத்து 743 பேரும், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 829 இடங்களில் சேர்வதற்கு 29 ஆயிரத்து 260 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 2,230 இடங்களில் சேர 16 ஆயிரத்து 71 மாணவர்களும், செய்யார் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 2470 இடங்களில் சேர்வதற்கு 13,684 விண்ணப்பமும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 230 இடங்களுக்கு 433 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

 இது குறித்து கல்வி ஆலோகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, “கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்தாண்டை காட்டிலும் விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் பிகாம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர். பிஏ தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிறப்பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எந்தப் பாடப்பிரிவினை தேர்வுச் செய்தாலும் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு குறித்து வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும் தேவைப்படுகிறது.

எனவே, இந்தப் பாடத்தினை வரலாறுப் பாடத்தினை படிக்கும் மாணவர்களும் கற்கும் வகையில் கற்றுத் தர வேண்டும். எந்தப் படிப்பினை படித்தாலும் தொழில் நுட்பம் தெரியாமல் சாதிக்கமுடியாது. பிஎஸ்சி வேதியியல், கணக்கு போன்ற பாடங்களை படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி நல்லப் பணியாக இருந்தாலும், அதிக நாட்கள் படிக்க வேண்டியது உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் 4 ஆண்டில் வேலைக் கிடைக்கும் வகையில் படிக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆசிரியர் பணிக்கு நல்ல சம்பளம் அளிக்கின்றனர். தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் வகையில் திறன்களை வளர்த்துக் கொண்டு, அதற்கான சான்றிதழ்களை வைத்திருந்தால் அதிக சம்பளத்தில் நல்ல வேலைக்கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.