கோவை நிலத்தடி நீர் மட்டம் உயர்வு… 24 குளங்கள், 21 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது..!

கோவை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 709 குளங்கள், கசிவு நீர் குட்டை, தடுப்பணைகள் உள்ளன. தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை உச்சமாக பெய்த நிலையில் கோவை மாவட்டத்தில் நீர் தேக்கங்களில் நீர் தேக்கம் அதிகமாகி வருகிறது.

குறிப்பாக ஊரக பகுதிகளில் வறண்டு கிடந்த நீர் தேக்கங்களில் நீர் நிரம்பியது. மாவட்ட அளவில், சுமார் 550 நீர் தேக்கங்கள் முழு அளவில் நீர் நிரம்பி உள்ளது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் வட்டாரங்களில் நீர் தேக்க குளங்கள், குட்டைகள் அதிகளவு நிரம்பி உள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள், நீர் குட்டைகளும் அதிகளவு நிரம்பி விட்டன. வன விலங்குகளின் நீர் தேவைக்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பியுள்ளன.

கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் நீர் ஆதாரத்தில் உள்ள உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி உட்பட 24 குளங்கள் முழுவதும் நிரம்பிவிட்டன. 21 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. குளங்கள் தொடர் இணைப்பில் இருப்பதால், தொடர்ந்து நீர் பாய்வதை தடுக்க முடியவில்லை. குனியமுத்தூர் செங்குளம் நிரம்பிவிட்டது. இதன் உபரி நீர் வடிகால் வழியாக குறிச்சி குளத்திற்கு திருப்பி விடப்பட்டது. குறிச்சி குளம் நிரம்பி வடிகால் வழியாக மீண்டும் நொய்யல் ஆற்றில் நீர் பாய்கிறது. மழை நீர் வரத்து காரணமாக நொய்யல் ஆற்றில் அவ்வப்போது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி வரை உயர்ந்துவிட்டதாக தெரியவந்தது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் குளங்கள் முழுமையாக நீர் தேங்கியிருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் 100 அடி ஆழத்தை எளிதாக எட்டி விட்டது.
கடந்த காலங்களில் குறிப்பாக கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழ் இருந்தது. நிலத்தடி நீர் மட்டம் 100 அடி வரை வந்து விட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.