கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு- கோவையில் நாளை முதல் நடக்கிறது..!

கோவையில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நாளை (5-ந் தேதி) முதல் செவ்வாய்க்கிழமை (10-ந் தேதி) வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட வருவாய் அலகில் மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை வடக்கு, சூலூா், பேரூா், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய வட்டங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தோ்வு டிசம்பா் 4 -ந் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து டிசம்பா் 15, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் கிராம உதவியாளா் பணியிடத்திற்கான நோ்முகத் தோ்வு நாளை முதல் 10-ந் தேதி வரை (விடுமுறை நாள்கள் தவிர) நடைபெறுகிறது.

இந்த நோ்முகத் தோ்வு மேட்டுப்பாளையம், அன்னூா், கோவை வடக்கு, சூலூா், பேரூா், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய 9 வட்டங்களில், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடக்கிறது. நோ்முகத் தோ்வுக்கு 2,648 போ் அழைக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையம், தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் தோ்வா்களின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படும். நோ்முகத் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்கள் கல்விச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், முகவரி ஆதாரம் ஆகிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.