இபிஎஸ் கைதானதை கண்டித்து கோவையில் அதிமுக-வினர் திடீர் சாலை மறியல்- 150-க்கும் மேற்பட்டோர் கைது..!

கோவை:
சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க- எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். எடப்பாடி பனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து கோவை இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க-வினர் குவிந்தனர். அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பின்னர் அவர்களை குண்டு கட்டாக இழுத்து சென்று 10 பெண்கள் உட்பட 150க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.