மகன் விபத்தில் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி..

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). இவரது மனைவி நந்தினி (45).

இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர்தனது நண்பர்களுடன் தொண்டாமுத்தூரியில் உள்ள உல்லாச விடுதிக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணான உள்பட 3 பேர் இறந்தனர்.

மகன் இறந்ததால் ரவி கிருஷ்ணாவின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து துக்கத்தில் காணப்பட்டனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் பூச்சி மருந்தை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்க வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் விஷம் குடித்து மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.