கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க நள்ளிரவு 1 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் உள்ளிட்ட வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைகளுக்கு செல்வோர் இரவில் கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்கிச் செல்ல வசதியாக கடைகள் நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது குறித்து மாநகர போலீஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம், கோவை மாநகர ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்துக்கும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். மேலும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று கோவை மா நகரில் இன்று முதல் தீபாவளி முடியும்வரை நள்ளிரவு 1 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மக்கள் பொருட்களை வாங்கி செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நள்ளிரவு 1 மணி வரை பஸ்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.