தவெக-க்கு தாவிய சி.வி சண்முகம், எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

மிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்துள்ளது. இந்த இரு அணிகளும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தின.

இதில், சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு த.வெ.க-வுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த தகவல்களுக்கு அ.தி.மு.க தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை கூடிய 17-வது சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம் தலைமையில் ஒரு அணியுமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். அப்போது, அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓ.எஸ் மணியன், மரகதம் குமரவேல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கேசி கருப்பணன் உள்பட 23 எம்.எல்.ஏக்கள் கொண்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர். அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இது அ.தி.மு.க-வில் பெரும் பிளவு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தது. ஆனாலும், சில அ.தி.மு.க தலைவர்கள் பிளவு இல்லை என்று கூறி வந்தனர். இந்த சூழலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மயிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசுகையில், “சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார்.

இந்த இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தான் தொடங்கப்பட்டது. இந்த 53 ஆண்டுகாலம் தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்கிறோம். 3, 4 தலைமுறைகளாக தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்து வருகிறோம். இந்த சூழலில், எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க சார்பில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனை பெரும்பாலான சட்டமன்ற உறுதிப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். தி.மு.க-வோடு இணைந்தால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால் பெரும்பான்மையான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சராக உள்ள விஜய்யின் த.வெ.க ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

அ.தி.முக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்ல, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க-வுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எஸ்.பி வேலுமணி, “அ.தி.மு.க-வை உடைக்கிறோம் என எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி உடைக்க க வேண்டிய எண்ணம், நோக்கம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். தொடர் தோல்வி காரணமாக கேள்வி எழுந்துள்ளது. கட்சி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியும் இறங்கி வரவேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.