ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை ‘கிடுகிடு உயர்வு..!

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரமலான் நாளன்று தர்காக்களில் அலங்காரத்திற்கு மல்லிகை பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதால் மல்லிகைப் பூ விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில், பூ மார்க்கெட்டில் நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், காட்டுமல்லி ரூ.450க்கும், முல்லை, ஜாதிமல்லி ரூ.350க்கும், ஐஸ் மல்லி ரூ.300க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.200க்கும், சம்பங்கி ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும், மருது ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘ரம்ஜான் பண்டிகை என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதில், மல்லி, ஐஸ் மல்லி, காட்டுமல்லி, கனகாம்பரம், முல்லை, ஜாதிமல்லி பூக்களின் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. வரும் 23ம்தேதி முகூர்த்த நாள் என்பதால் மேலும் பூக்களின் விலை உயரும். பூக்கள் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது’ என்றார்.