4 நாள் வேலை.. 3 நாள் ஓய்வு.. 12 மணி நேர வேலை மசோதா.. இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்தார்.

நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..

தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ – குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

தொழிலாளர்களின் உணர்வை போற்றிப் பாராட்டி, மே தின நினைவு சின்னம் அமைத்த தலைவர் கருணாநிதி வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடிய வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு அரசே கொண்டாட வேண்டிய நேரத்தில், அன்னிய நாட்டு முதலீட்டை காரணம் காட்டி தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல என்றும் அவைகள் தங்கள் கருத்தை திமுக தரப்பிடம் தெரிவித்தும் வருகின்றன.

ஆனால், இந்த 4 நாள் வேலை, 3 நாள் ஓய்வு, 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்துள்ளார். அதாவது, “மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, மென்பொருள் துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு 12 மணி நேர வேலை மசோதா பொருந்தும் வாய்ப்புள்ளது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, “இந்த 65-ஏ சட்டத் திருத்தம் என்பது, உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வருகின்றபோது, மற்ற மாநிலங்களுடன் ஒப்படுகையில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை (flexibility) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற நெகிழ்வுத்தன்மையை எந்தெந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று பார்த்தால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கூறியதைப் போல, அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலைபார்க்கும் சூழல்: உதாரணமாக, மின்னணுவியல் துறையில் (Electronics Industries) இருக்கக்கூடிய நிறுவனங்கள், Non leather shoe making என்று சொல்லக்கூடிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள், Electronic clusters அல்லது மென்பொருள் துறை (Software) இவ்வாறான தொழில்களில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், அங்கு பணியாற்றுபவர்கள் விரும்பினால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

இதனால், வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.

இன்றையச் சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த மசோதா எந்த தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை மாற்றுவதாக இது அமையாது. இதை நடைமுறைப்படுத்தும்போது, எந்த இடத்தில் பணியாற்றுகின்றனர், அந்த தொழிலின் வேலை சூழல் என்ன என்பது குறித்து பார்க்கப்படும். உதாரணத்துக்கு, பொறியியல் சார்ந்த தொழிற்சாலை தளத்துக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தளத்துக்கும் மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கிறது.

விளக்கம்: பணியாளர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு இடையே உள்ள தூரம் என்ன என்பது குறித்து பார்க்கப்படும். 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வசதிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழ்நிலைகள் இல்லை” என்று விளக்கம் தந்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.