நீலகிரி காட்டுப் பன்றிகளுக்கு பரவும் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல்… தனிக்குழு அமைத்து கண்காணிப்பு..!

நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இங்கும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது.இதில் அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 காட்டுப்பன்றிகள் இறந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும் இந்த பன்றிகளும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் இறந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்களில் காட்டுப்பன்றிகள் ஏதேனும் இறந்து கிடக்கின்றனவா? என்பதை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இறந்து. கிடந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அருகில் வரும் காட்டுப் பன்றிகள் விரட்டப்படுகின்றன. இந்நோய் மனிதர்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு பரவுவது குறித்த தகவல் இல்லை. இருந்த போதும் பன்றிகளுக்கும் அதிகம் பரவக்கூடிய சூழல் உள்ளது.
ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் பந்திப்பூர் மற்றும் முதுமலை பகுதிகளில் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

எனவே வனத்துறை இதன் பரவலை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட குந்தா மற்றும் கோத்தகிரி வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. இவற்றின் உடல் பாகங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும், உரிய வழிமுறைகளை பின்பற்றி அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் எனவும் வனச்சரகர்களுக்கு, வனத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.