கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு யானை, மயில் திடீர் மரணம்..

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் அருகே நீலாம்பதி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு இதய நோய் ஏற்பட்டதால் இறந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது .

இதே போல கோவை வடவள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை பகுதியில் நேற்று மாலை ஒரு மயில் பறந்து வந்தது. அந்த மயில் அருகில் சென்ற மின்சாரர் கம்பியில் அமர்ந்தது. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் மயில் படுகாயம் அடைந்து கீழே விழுந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்..இதில் அந்த மயில் மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரிய வந்தது இதையடுத்து வனத்துறையினர் இறந்த மயிலை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று புதைத்தனர்.