பொள்ளாச்சி அருகே இன்று காலை விபத்து: சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதல் … சுக்குநூறாக நொறுங்கிய சரக்கு ஆட்டோ: 2 பேர் பலி-தென்னந்தோப்புக்குள் கவிழ்ந்த பஸ்- பயணிகள் பலர் படுகாயம்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் உள்ளது.

இந்த பகுதிக்கு பொள்ளாச்சியில் இருந்து தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மேம்பால பணிகள் நடந்து வருவதால் கோபாலபுரத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் அய்யம்பாளையம் வழியாக ஒருவழிப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை கோபாலபுரத்தில் இருந்து, பொள்ளாச்சிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் இந்த பஸ்சில் கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

பஸ் கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. தனியார் பஸ் கோபாலபுரத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது முன்னாள் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை முந்தி செல்வதற்காக பஸ் டிரைவர் வாகனத்தை வேகமாக இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பஸ் பயங்கரமாக மோதியது. பஸ் மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோ முழுவதுமாக சுக்குநூறாக நொறுங்கியது. குறிப்பாக முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.

இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த தென்னந்தோப்புக்குள் சென்று கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு அபய குரல் எழுப்பினர். இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.

சத்தம் கேட்டதும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். அவர்கள் பஸ்சில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மற்றும் சரக்கு ஆட்டோவில் உயிருக்கு போராடிய நபரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்னந்தோப்புக்குள் கவிழ்ந்த தனியார் பஸ்சும் வெளியில் மீட்டு கொண்டு வரப்பட்டது.

விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை நேரத்தில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால் பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.