காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் கரும்புத் துண்டுகளை சுவைத்து ஜாலியாக சுற்றி திரியும் காட்டு யானை..!!

சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு துண்டுகளை சாப்பிட குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள உயரத்தடுப்புக்கம்பி வழியாக நுழையும் போது அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகள் உயரத் தடுப்பு கம்பியில் உரசுவதால் கரும்பு துண்டுகள் அதிக அளவில் சிதறி சாலையில் விழுகின்றன. இந்த கரும்புத் துண்டுகளை சாலையோர வனப்பகுதியில் லாரி டிரைவர்கள் வீசிச் செல்வதால் பகல் நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் முகாமிட்டு கரும்பு துண்டுகளை தின்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையில்  கரும்பு துண்டுகளை சாப்பிட குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறின. அப்போது சோதனை சாவடி பகுதியில் சாலையில் கீழே விழுந்த கரும்பு துண்டுகளை ஒரு காட்டு யானை சுவைத்தபடி ஜாலியாக நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.  பகல் நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி உள்ளனர்..