உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கோவையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அரவர் கூறுகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அங்கு போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளா- தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரை மார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இங்கு முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழேயோ கொப்பளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.