கோவை-தூத்துக்குடி இடையே மீண்டும் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் – பயணிகள் வேண்டுகோள்..!!

சென்னைக்கு அடுத்தபடியாக வர்த்தக நகரங்களான கோவையையும் தூத்துக்குடியையும் இணைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு கோவை-தூத்துக்குடி இடையே ஒரு லிங்க் (பிணைப்பு) ரயில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது, கோவை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில், 7 பெட்டிகள் தூத்துக்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து பிணைக்கப்படும். 2012-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 7 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மூலம் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வந்தனர்.
கொரோனா பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்ட இந்த ரயில் தற்போது (ஜூலை 2 முதல்) இணைப்பு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கோவையில் இருந்து – தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, தூத்துக்குடி செல்லும் ரயிலுக்கு மாற வேண்டும்.
மறு வழித்தடத்தில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்று மணியாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து, நாகர்கோவிலில் இருந்து வரும் விரைவு ரயிலில் இரவு 11.30 மணிக்கு ஏற வேண்டும்.
இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோவை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டபோது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 300 பேர் வரை பயணம் செய்தனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவை பயணிகள் கூறும்போது,
கேரளத்தில் பிணைப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள், தற்போது தனி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, கோவை -தூத்துக்குடி இடையே இரவு நேரத்தில் தனி ரயில் இயக்கப்பட வேண்டும் அல்லது தனி ரயில் இயக்கப்படும் வரை பழைய மாதிரி கோவை – தூத்துக்குடி இடையே பிணைப்பு ரயிலை இயக்கினால் மட்டுமே மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில் நகரமான கோவை, மற்றொரு தொழில் நகரமான தூத்துக்குடியுடன் கொண்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்போர் தூத்துக்குடிக்கான ரயில் சேவையைப் பெற முடியாமல் தவிக்கும் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் குரல் கொடுக்க வேண்டும்.
நள்ளிரவு நேரத்தில் இணைப்பு ரெயிலுக்கு மாற வேண்டும் என்பதால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். சாதாரண மக்களைப் பாதிக்கும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட்டு, மீண்டும் லிங்க் (பிணைப்பு) ரயிலையே இயக்க வேண்டும் அல்லது கோவை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.