தொண்டாமுத்தூர் அருகே தென்னை மரங்களை பிடுங்கி வீசி ஒற்றை காட்டு யானை அட்டகாசம்- அச்சத்தில் விவசாயிகள்,பொதுமக்கள் ..!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள கணுவாய் சவுந்தர்ராஜன் என்பவரது தோட்டத்தில் யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் தோட்டத்துக்கு வரும் யானை அங்கு பயிரிடப்பட்டு உள்ள தென்னங்கன்றுகளையும், மரங்களையும் பிடுங்கி எறிந்து நாசம் செய்தது. மேலும் 200 வாழை மரங்களையும் மிதித்து துவம்சம் செய்தது.
தோட்டத்தை சுற்றியும் சோலார் மின் இணைப்பு செய்து பாதுகாப்பு செய்து உள்ளனர். அதையும் மீறி யானை தோட்டத்தில் தொடர்ந்து புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இதே யானை இளங்கோ, ராமச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களிலும் புகுந்து தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. தொடர்ந்து இந்த ஒற்றை யானை குப்போபாளையம் பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். யானை வருவது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனத்துறையினர் விரட்டினாலும், அவர்களுக்கு போக்குகாட்டி தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் ஊர் பொதுமக்கள் கூறு கையில் கும்கி யானை உதவியுடன் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகள், ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.