ஆனைகட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்: கர்ப்பிணி மனைவி, குழந்தையுடன் உயிர் தப்பிய குடும்பம்..!

கோவை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில்
பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு ஆகிய 6
மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், வயநாட்டில் மீன் அங்காடி என்ற இடத்தில் கனமழை கொட்டியது.
இதனால், அங்குள்ள வாய்க்கால்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்பாடு என்ற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தார் சாலை மற்றும் தரை
பாலம் ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை
அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல் கோவை கணபதி கட்டபொம்மன் நகர் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (வயது
45). இவர் சம்பவத்தன்று தனது கர்ப்பிணி மனைவி, குழந்தை மற்றும்
மனைவியின் தங்கை ஆகியோருடன் ஆனைகட்டிக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் மாலை தூவைப்பதி கொடுங்கரை பள்ளம் அருகே வந்த போது அங்கிருந்த
ஆற்றின் கரை ஓரோம் தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் ஆற்றில்
குளிக்க சென்றார். கேரளாவில் கன மழை பெய்து வருவதால் திடீரென ஆற்றில்
வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனை உணர்ந்த கீர்த்திராஜ் உடனே தனது
குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு வெளியே வந்தார். ஆனால் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்ததால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.காரை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் வெள்ளம் அடித்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கீர்த்திராஜ் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் கயிர் கட்டி காரை ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைத்தனர். பின்னர்
ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. இதில்
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தடாகம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு மற்றும்
பாதுகாப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.