கியாஸ் சிலிண்டர் குடோனை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..!

கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையம் பகுதியில் காந்தி நகர் உள்ளது.
இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன்
உள்ளது. இங்கு தினமும் 100 கணக்காக கியாஸ் சிலிண்டர் கையாளப்படுகிறது.
இதனால் குடோனை சுற்றி உள்ள மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கியாஸ் குடோன்
உரிமையாளரிடம், கியாஸ் குடோன் குடியிருப்பு பகுதியில் இருப்பது ஆபத்து,
எனவே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் 2 வருடங்களுக்கு மேலாகியும் குடோன் இடமாற்றம் செய்யப்பட வில்லை.
இதனால் பொது மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அங்கு சென்று
கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் ஜூலை மாதத்தில் மாற்றி விடுவதாக
தெரிவித்துள்ளனர்.

இடம் மாற்றுவதாக கூறி 2 மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கியாஸ் குடோன்
செல்பட்டு வந்தது. இதனால் இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும்
மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இந்த கியாஸ் குடோன் இருப்பதால் தினமும் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.
சில நேரங்களில் கியாஸ் வாசனை அதிகளவில் வருகிறது. அப்போது பயமாக
உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கியாஸ் குடோனை இடமாற்றம்
செய்ய வேண்டும். பல முறை உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை எனவே சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை
மறியலால் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.