புதுமைப் பெண் திட்டம்: கோவையில் 3,596 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை..!!

கோவை: தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில்
செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித்
திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி
உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில்
அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் பயின்று
உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்
புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000
வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 199 கல்லூரிகளைச் சோ்ந்த 3,596 மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1000 உதவித் தொகையை அமைச்சா்
செந்தில்பாலாஜி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை எம்.பி. பி.ஆா்.நடராஜன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை கமிஷனர் ஷா்மிளா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலா் தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுமைப் பெண் திட்டம் குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கவும், பெண்
குழந்தைகளின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும் மூவலூா்
ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2
வரை அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி நேரடியாக செலுத்தப்படும். மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழகத்தில் உயா்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும்.
இலவச கல்வி தனியாா் பள்ளியில் இலவச கல்வி திட்டத்தின்கீழ் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை பயின்று பின்னர் 9 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும்
இத்திட்டத்தில் பயன்பெறலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும்
பயன்பெற முடியும். இத்திட்டத்துக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இத்திட்டம் தொடா்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் . இவ்வாறு அவர் கூறினார்.