தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது.தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது தவெக.
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 22 ஆம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் தேதி முடிவு செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.மேலும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கும், புதிய நிறுவனங்களுக்கும் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








