ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் வரலாறு காணாத போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார மமதைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். “எங்கள் நிலம், எங்கள் உரிமை, எங்கள் அரசு” என்று முழங்கும் அந்த மக்களின் குரல், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அதிகார இருக்கையை மட்டுமல்ல, ராணுவத் தளபதி அஸீம் முனீரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது.

அந்த மண்ணின் மைந்தனான சர்தார் அமன் காஷ்மீரியின் தலைமையில், ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’ முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், ஏதோ ஒரு சிலரது கோரிக்கை அல்ல; பல தசாப்தங்களாக நசுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் ஆத்மார்த்தமான விடுதலை வேட்கை. நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை” என்று முசாஃபராபாத் பொதுக்கூட்டத்தில் அமன் காஷ்மீரி கர்ஜித்தபோது, அது அந்தப் பகுதியில் வாழும் ஒவ்வொரு தாயின் கண்ணீரிலும், ஒவ்வொரு குழந்தையின் ஏக்கத்திலும் எதிரொலித்தது. போராட்டக்காரர்களைக் கொல்வதற்குத் தலைக்கு விலை பேசும் அதிகாரிகளின் மிரட்டல்கள், அவர்கள் மீது வீசப்படும் துப்பாக்கிக் குண்டுகள், அடக்குமுறை சட்டங்கள் – இவை அனைத்தையும் தாண்டி, “எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு களத்தில் நிற்கிறோம்” என்று அவர் கூறிய வார்த்தைகள், அந்தப் போராட்டத்தின் தீவிரத்தைப் பறைசாற்றுகின்றன.

இது வெறும் நிலத்துக்கான போராட்டம் மட்டுமல்ல; அடுத்த தலைமுறைக்காக, சிறைப்பட்டிருக்கும் ஒரு சமூகம் தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொள்ளும் விடுதலைக் காவியம். அந்த மண்ணின் ஒவ்வொரு வீதியிலும் இப்போது சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் நெருப்பு, பாகிஸ்தானின் ஆதிக்கச் சுவர்களைத் தகர்க்குமா அல்லது வரலாற்றில் மற்றொரு துயரமாகப் பதியுமா என்பது, அந்த மக்களின் உறுதியைப் பொறுத்தே அமையும்.