தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.
அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர்களையும் கட்சி நிர்வாகிகளையும் விமர்சித்து, கைது மிரட்டல் விடுப்பதன் மூலம் கட்சியை அச்சுறுத்த முடியாது என்று கூறினார். எந்த சூழலிலும் திமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த அவர், சினிமா உலகில் இருந்த விஜய்யையும், அரசியலுக்கு வந்துள்ள தற்போதைய விஜய்யையும் ஒப்பிட்டு பல கேள்விகளை எழுப்பினார். மேலும், எம்.ஜி.ஆரை மேற்கோள் காட்டி பேசுவதற்கு விஜய்க்கு என்ன தகுதி உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
அதேபோல், தற்போது நடைபெறும் ஆட்சி குறித்து பேசிய அவர், “இது விஜயின் ஆட்சி அல்ல. வேறு நபர்களின் செல்வாக்கில் நடைபெறும் ஆட்சி” என்று குற்றம்சாட்டினார். மேலும், இந்த ஆட்சி இன்னும் ஆறு மாதங்கள் கூட நீடிக்காது என்றும், ஆறு மாதங்களுக்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் அவர் கூறினார். அப்போது திமுக மூத்த தலைவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் விஜயின் அரசியல் மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும் கூறினார். தன்னை கைது செய்து மிரட்டினாலும் தனது அரசியல் நிலைப்பாடு மாறாது என்றும், கடந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், காவல்நிலையத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டதாகவும், ஆனால் அதற்கு தாம் சம்மதிக்கவில்லை என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எந்த அழுத்தத்திற்கும் திமுக பணியாது என்றும், கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார்.









