யார் கூட்டுக் களவாணிகள்..? விஜயை வெளுத்து வாங்கிய அதிமுக!

ரூர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவும் அதிமுகவும் கூட்டுக்களவாணிகள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.இதற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “திமுகவும் அதிமுகவும் வேறு வேறு இல்லை. திமுக கடைசியில் அதிமுகவிடம் போய் தான் நிற்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டுக்களவாணிகள். இல்லைன்னு அவர்களால் சொல்ல முடியுமா?. எங்களுக்குள்ள ஒட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு அறிவிக்க முடியுமா? நிரூபிக்க முடியுமா? இந்த வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபித்து காட்டுங்கள், அப்புறமா பேசுங்கள் என சவால் விடுக்கும் வகையில் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “கரூரில் மேடை… இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், கூட்டுக் களவாணிகள் என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார். யார் கூட்டுக் களவாணிகள்? திமுகவை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா? அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?

அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்? ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்! கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?

குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல.. மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?  கரூர் துயரம் நடந்த போது ஓடி ஒளிந்ததை ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?

கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?.. அதிமுக மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.

டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன் என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுகவின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?

அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு! இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா? நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?

எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன திமுக கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும். இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும். உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வாழ்க்கை ஒரு வட்டம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும்! ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்” என சாடியுள்ளது.