CM விஜயை ஒருமையில் பேசிய செல்லூர் ராஜு

மிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிமட்ட அளவில் கடுமையான அரசியல் மோதல் வெடித்துள்ள நிலையில், மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முதலமைச்சர் விஜய் மீது பாய்ந்துள்ள விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரைக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் சமீபத்திய பேச்சு மற்றும் செய்கைகளை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு, நாகரிக எல்லைகளைத் தாண்டி ஆவேசமாகப் பேசினார். “வாயில் வந்ததையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல; முதலமைச்சராக இருப்பவர் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், ஒரு நடிகராகப் பேசுவதற்கும், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பதை விஜய் உணர வேண்டும் என்றார். மேலும், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் அமர்ந்த பெருமைமிக்க நாற்காலியில் அமர்ந்துகொண்டு, சட்டமன்றத்தை சந்தக்கடை போல மாற்றி விஜய் அரைவேக்காடு தனமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

விஜய்யின் கடந்த கால விவகாரங்களை ஒவ்வொன்றாகத் தோண்டியெடுத்து ஒருமையில் சாடிய செல்லூர் ராஜு, “நீ என்ன பரம யோக்கியனா விஜய்? நீயே ஒரு களவாணி” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்கினார். ‘புலி’ படத்தில் நடித்தபோது 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, குறைவான கணக்குக் காட்டியதற்காக வருமான வரித்துறையிடம் 1.5 கோடி ரூபாய் அபராதம் கட்டியதையும், வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தபோது வரி ஏய்ப்புப் புகாரில் நீதிமன்றம் அபராதம் விதித்ததையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். பிறரை விரல் நீட்டி விமரிசிப்பதற்கு முன்னால், தனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை விஜய் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கை நீட்டி எச்சரித்தார்.

இறுதியாக, அண்மையில் கரூரில் விபத்தில் இறந்த 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய விஜய்யின் அறிவிப்பைச் சாடிய அவர், இதற்கு முன்பு விபத்துகளில் இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்றும், இனிமேல் தமிழகத்தில் வெள்ளத்திலும் விபத்திலும் இறப்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கொடுப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். தவெகவை நோக்கி அதிமுகவினர் சிலர் ஓடுவதைப் பற்றிக் கவலை இல்லை என்றும், இரு திராவிடக் கட்சிகளையும் ஓட ஓட விரட்டுவேன் என்று கூறும் விஜய், விரைவில் அரசியலை விட்டே ஓடும் காலம் வரும் என்றும், அப்போது மீண்டும் அதிமுகவே அதிகாரத்திற்கு வரும் என்றும் செல்லூர் ராஜு தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.