முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மின்சார வாரியத்தை நவீனப்படுத்தி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்டமாக 15,000 புதிய ஊழியர்களை முழுமையான அரசுப் பணியில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் மாநில அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சாரத் துறையில் நிலவும் தற்போதைய பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், நடப்பு ஆண்டிலேயே 15,000 புதிய பணியாளர்களைப் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், வாரியத்தில் தற்போது ஏறத்தாழ 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்டார். முதல்கட்டமாக 15,000 இடங்களை நிரப்புவதற்கான ஆரம்பக்கட்ட வரைவு அறிக்கை (Proposal) தயார் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் அவர்களின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், இவை அனைத்தும் தற்காலிகப் பணிகளாக அல்லாமல், முறையான முழுநேர அரசுப் பணியிடங்களாக இந்த ஆண்டுக்குள்ளேயே நிரப்பப்படும் என உறுதி அளித்தார். மேலும், கேங்மேன் பணியிடங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு இன்னும் சில வாரங்களில் முறையான தீர்வு காணப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
நிர்வாகச் சீரமைப்பின் ஒரு அங்கமாக, மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாகச் செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பணியிட மாற்றங்களும், பதவி உயர்வுகளும் எவ்வித தாமதமுமின்றி நேர்மையான முறையில் இனி தொடர்ந்து வழங்கப்படும்.
தான் பொறுப்பேற்கும் போது மின்சாரத் துறை சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கருதியதாகவும், ஆனால் தற்போதைய கணக்கீட்டின்படி அது ரூ. 2.5 லட்சம் கோடி கடனில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மிக சவாலான துறையாக உருவெடுத்துள்ள மின்துறையைச் சரிவரக் கவனிக்காமல் விட்டிருந்தால், அது தனியார்மயமாக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் என்றும், உரிய நேரத்தில் அரசு தலையிட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விவரித்தார்.








