ரான் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் புதிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பதற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சூழலில் இந்திய தூதரகம் தனது முந்தைய எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம். தற்போது ஈரானில் இருக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாணவர்கள், தொழிலதிபர்கள், புனித யாத்திரைக்கு சென்றவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் பொருந்தும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய அரசு இதுவரை 8 முறை பயண எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய தூதரகம் இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அவசர அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அப்போது, இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் வகையில் சிறப்பு ஹெல்ப்லைன் எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது சுமார் 7,500 இந்தியர்கள் இன்னும் ஈரானில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழில் தொடர்பான காரணங்களுக்காக அங்கு தங்கி இருப்பவர்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆயிரக்கணக்கான இந்தியர்களை ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளின் நில எல்லைகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பாதுகாப்பு சூழல் எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இந்தியர்கள் தேவையற்ற வெளிச்செல்களை தவிர்க்கவும், தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவசர தேவைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறும், பயண ஆவணங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்குமாறும் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








