இன்றைய காலகட்டத்தில் ‘ரீல்ஸ்’ மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கின்றது. மாணவர்கள், இல்லத்தரசிகள், அரசு ஊழியர்கள், முதியோர், மருத்துவர்கள், காவலர்கள் என பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களை உருவாக்கும் மோகத்திலிருந்து யாரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது.
பல்வெறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்களும் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பலர் யூடியூப் சேனல்களை வைத்திருப்பதுடன், பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும் பதிவிடுகின்றனர்.
மத்திய அரசு தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சமூக ஊடக நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் ஏற்கனவே நிர்வாகத்தின் உயர் மட்டங்களை எட்டியுள்ளது.சமீபத்தில் செயலாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி மூத்த அதிகாரிகளிடம் இந்த யோசனையை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கூட்டத்தில், ஒரு ஒருங்கிணைந்த இணையதளத்தை (portal) உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்தத் தளம் குடிமக்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும்.இறுதி செய்யப்பட்டதும், இன்ஸ்டாகிராம் , எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கான இந்த நடத்தை விதிகள் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று வட்டாரங்கள் பிடிஐ-யிடம் தெரிவித்தன.இந்த விதிகளின் கீழ் பதவி அல்லது அந்தஸ்தின் அடிப்படையில் எந்த விலக்கும் அளிக்கப்படாது. இணைச் செயலாளர்கள் முதல் இளநிலை எழுத்தர்கள் வரை அனைவரும் ஒரே விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது இல்லை. மேலும், குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.அரசாங்க அதிகாரிகள் தங்களையும் தங்கள் பணியையும் முன்னிலைப்படுத்தும் வகையிலான உள்ளடக்கங்களைப் பதிவிடும் போக்கு அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பதிவுகளில் சில வரம்புகளை மீறுவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் தங்களுக்கு என ஒரு தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த விதிமுறைகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பணி விதிகள் உள்ளன. ஆனால் அவை எதுவும் இன்ஸ்டாகிராம் அல்லது யூடியூப் போன்ற தளங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கோர் இன்டெக்ரா’ நிறுவனத்தின் இணக்க ஆலோசனைப் பிரிவுத் தலைவரான முனாப் அலி பெக், இந்தச் சூழலைத் தொடர்ந்து கவனித்து வருகிறார். தற்போதைய சிதறிய ஒழுங்குமுறை கட்டமைப்பு எவ்வாறு உருவானது என்பதை அவர் என்டிடிவி -யிடம் விளக்கினார்.அரசு ஊழியர்களின் சமூக ஊடகப் பதிவுகளைச் சரியாக ஒழுங்குபடுத்தவும், தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடவும் மோடி அரசு ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருகிறது” என்று பெக் கூறினார். தற்போது ஊழியர்களின் பெரும்பாலான பதிவுகள், குறிப்பிட்ட சமூக ஊடகக் கொள்கையின் கீழ் வராமல், அந்தந்தத் துறையின் பொதுவான பணி விதிகளின் வரம்பிற்குள்ளேயே வருகின்றன என்று அவர் விளக்கினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளில் இடம்பிடித்த ஒரு சம்பவத்தையும் பெக் சுட்டிக்காட்டினார். “2017-ஆம் ஆண்டில், தனக்குத் தரமற்ற உணவு பரிமாறப்படுவதாகக் குற்றம் சாட்டிய ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் இடம்பெற்றிருந்த வைரல் வீடியோ ஒன்று எனக்கு நினைவிருக்கிறது,” என்று அவர் கூறினார். அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சேவை விதிகளின் கீழ் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போதுள்ள விதிகள் வேறு ஒரு காலகட்டத்திற்காக உருவாக்கப்பட்டவை என்று பெக் குறிப்பிட்டார். அவை, ஊழியர்கள் துறை சார்ந்த தகவல்களைப் பொதுமக்களுடனோ அல்லது பத்திரிகைகளுடனோ பகிர்வதைத் தடை செய்கின்றன. ஆனால் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் அல்லது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற உள்ளடக்க வடிவங்களை அவை குறிப்பாகக் குறிப்பிடவில்லை.
மூத்த அதிகாரிகளிடையே வளர்ந்து வரும் ஒரு போக்கையும் அவர் சுட்டிக்காட்டினார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், தங்களுக்குப் பொதுமக்களிடையே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதற்காக, அதிகாரப்பூர்வப் பதிவுகளைத் தனிப்பட்ட உள்ளடக்கத்துடன் கலந்து, தனிப்பட்ட யூடியூப் சேனல்களையும் சமூக ஊடகக் கணக்குகளையும் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.வெவ்வேறு துறைகளுக்கு ஏற்ப சேவை விதிகள் மாறுபடுவதால், அரசு ஊழியர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒழுங்குபடுத்துவதற்காக, மத்திய அரசு ஒரு சமூக ஊடக நடத்தை விதியை உருவாக்கி வருகிறது.” என்று பெக் கூறினார். பெக்கின் கூற்றுப்படி, புதிய நடத்தை விதியானது, ஊழியர்கள் எதைப் பதிவிடலாம், எதைப் பதிவிடக் கூடாது என்பதை வரையறுக்கும். அது முறைகேடாகக் கருதப்படும் செயல்களைப் பட்டியலிட்டு, அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட இந்தக் குறியீடு ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல. இது இந்தியாவின் டிஜிட்டல் ஒழுங்குமுறைகளை மேம்படுத்தும் ஒரு பரந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும். கடந்த மாதம், சட்டவிரோத உள்ளடக்கத்தை தளங்கள் அகற்றுவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் குறைத்தது. முன்பு 36 மணிநேரம் எடுத்த பணிகள், இப்போது ஒரு முறையான அறிவிப்பைப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
மேலும், டீப்ஃபேக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பான கவலைகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளன. பயனர்கள் எது உண்மையானது, எது போலியானது என்பதை வேறுபடுத்தி அறியும் வகையில், இடைத்தரகர்கள் இனி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தெளிவாகக் குறியிடவும், கண்டறியக்கூடிய மெட்டாடேட்டாவைப் பராமரிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.









