அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் 11-ஆம் தேதி வர்த்தக முடிவில் ரூபாய் 95.55 ஆக நிலைபெற்றது.இதன் மூலம் தொடர்ந்து நான்காவது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.இந்த வாரத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு சுமார் 1.1% குறைந்துள்ளது. கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வாராந்திர சரிவாக இது பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது ரூபாயின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு மேல் சென்றுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயரும்போது அதிக அளவு டாலர் தேவைப்படுகிறது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து ரூபாய் மீது அழுத்தம் ஏற்படுகிறது.முன்னதாக மே மாதத்தில் ரூபாய் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 96.96 வரை சரிந்திருந்தது. அதன் பிறகு சில காலம் மீண்டு வந்த ரூபாய், செப்டம்பர் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் 94.30 அருகே வலுவடைந்தது.ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச பத்திர சந்தை மாற்றங்கள் காரணமாக அந்த முன்னேற்றத்தின் பெரும்பகுதி பின்னடைந்துள்ளது.ரூபாயின் சரிவை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு செலாவணி சந்தையில் RBI தலையிட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், டாலர்-ரூபாய் Sell/Buy Swap நடவடிக்கைகளையும் RBI தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கி அமைப்பில் அதிகமாக இருக்கும் ரூபாய் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.
RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவும், சந்தையில் பணப்புழக்கத்தை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருந்தால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டாலருக்கான தேவை மேலும் அதிகரித்து ரூபாயின் மதிப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படலாம்.அதே நேரத்தில், எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வரும் நாட்களில் RBI-யின் நடவடிக்கைகள் மீது சந்தை கவனம் செலுத்தும்.ரூபாய் தொடர்ந்து 95-க்கு மேல் வர்த்தகமாகி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் ஆகியவை இந்திய நாணயத்தின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.ரூபாய் மீண்டும் 96-க்கு அருகில் செல்லுமா அல்லது RBI நடவடிக்கைகளால் மீண்டு வருமா என்பது வரும் நாட்களில் முக்கியமாக கவனிக்கப்படும்.









