கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்க உள்ளார். இவரது பதவியேற்பு விழா ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதோடு டிகே சிவக்குமாரின் அமைச்சரவையில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பொறுப்பேற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமார் துணை முதல்வரானார். அப்போது சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதில் சித்தராமையா வென்றார். தற்போது அவர் 3 ஆண்டு காலம் முதல்வர் பதவியை நிறைவு செய்துள்ளார். இந்நியைில் தான் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று டிகே சிவக்குமார் போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து சித்தராமையாவை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி மேலிடம் கூறியது. அதன்படி சித்தராமையா தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி ஜூன் 3ம் தேதி அவர் கர்நாடகா முதல்வராக பதவியேற்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

முதல்வராக பதவியேற்க உள்ள டிகே சிவக்குமாருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு இன்னொருவர் நியமனம் செய்யப்பட உள்ளனர். அந்த பொறுப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் ஜார்கிகோளி நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும் டிகே சிவக்குமார் அமைச்சரவையில் சித்தராமையாவிற்கு பதில் அவரது மகன் யதீந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. யதீந்திரா தற்போது எம்எல்சியாக உள்ள நிலையில் அவரை இன்று சித்தராமையா டெல்லியில் ராகுல் காந்தியிடம் அறிமுகம் செயது வைத்தார். யதீந்திரா அடிப்படையில் டாக்டர் ஆவார். இதற்கு முன்பு அவர் எம்எல்ஏவாகவும் இருந்த நிலையில் தற்போது எம்எல்சியாக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.