விஜய்க்கு ஓட்டு போடுங்க என் பேரன் சொன்னான் – மனம் திறந்து சொன்ன நீதிபதி

ப்ரல் 21, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிவடையும் நேரம். சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார்.இந்த நேரத்தில ஒவ்வொரு வீட்டுல இருக்கிற குட்டி நண்பா, நண்பீஸ்க்கு ஒரு Request. உங்களுக்கு ஒரு சாக்லேட், டிரஸ் வேணும்னா அழுது அடம்புடிச்சி Success பண்ணிடுவீங்கல்ல. அந்த மாதிரி உங்களுக்கு புடிச்ச விஜய் மாமாவிற்காக. உங்க வீட்டில இருக்கிற அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா. ஓட்டு போடற வயசுல இருக்கிற அண்ணா, அக்கா என எல்லாருகிட்டயும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்க” என்று பேசியிருந்தார்.இந்த பேச்சு வாக்குப்பதிவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி கட்டிலில் முதலமைச்சராக விஜய் அமர்ந்துள்ளார். ஆனால் அவர் பேசிய அந்த பேச்சு தற்போது சிக்கலாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி பொது நல மனுவை தாக்கல் செய்தார். குழந்தைகள் மீது செல்வாக்கு செலுத்தியது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பாக திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு மே 29ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், திமுக , அதிமுக, தவெகவிற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர், தவெக: ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது நடந்ததாக கூறப்படும் விதிமீறல். தேர்தல் முடிந்துவிட்ட சூழலில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு இருக்கும் அதிகாரம் என்ன? என்பது பற்றி ஆராய வேண்டியுள்ளது. ஒரு அரசியல் கட்சியைத் தகுதிநீக்கம் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. அதன் பதிவை மட்டுமே ரத்து செய்ய முடியும் என்று வாதிட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: எப்படி பார்த்தாலும் குழந்தைகளை பயன்படுத்தியது தவறு தான். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். வாக்களிக்க செல்லும் போது விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று என்னுடைய பேரனும் வலியுறுத்தினார்.

மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர், தவெக: பெற்றோர்களுக்கு குழந்தைகள் அறிவுரை கூறும் காலத்தில் இருக்கிறோம். என்ன செய்ய? பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, திமுக: முறைகேடு நடந்திருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டுவதால் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட வேட்பாளரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்திருக்க வேண்டும்.

வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தேர்தல் ஆணையம்: எங்களுக்கும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்.