பூமியில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள் சமவெளிகளிலோ அல்லது வாழ்வதற்கு உகந்த மலைப் பிரதேசங்களில் தான் அமைந்துள்ளன.ஆனால், கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு மிகக் கடுமையான புவியியல் சூழலில், மேகக் கூட்டங்களைத் தாண்டி விண்வெளிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு விசித்திர நகரம் தான் ‘லா ரின்கோனாடா’
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், அதிகாரப்பூர்வமாக ‘உலகின் மிக உயரமான நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் அதீத உயரம் காரணமாக, இந்நகரம் விண்வெளிக்கு மிக அருகில் இருப்பதாக மக்கள் வியப்புடன் கூறுகிறார்கள்.சாதாரண நிலப்பரப்புகளோடு ஒப்பிடும்போது, இங்கு காற்றில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு வெறும் 50 சதவீதம் மட்டுமே ஆகும். இதனால் இங்கு முதன்முறையாகச் செல்லும் எவராலும் சாதாரணமாகச் சுவாசிக்க முடியாது. ஆனால், பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் உள்ளூர் மக்கள், இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தாங்கும் வகையில் தங்களது உடல் அமைப்பையே மாற்றியமைத்துக் கொண்டு பழகியுள்ளனர்.
சுவாசிக்கக் காற்றே இல்லை, வெப்பநிலை எப்போதும் 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும் இந்த நரக பூமியில் சுமார் 50,000-க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் இங்கு கொட்டிக்கிடக்கும் ‘தங்கம்’ தான். இந்நகரத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இங்குள்ள ஆபத்தான நிலத்தடி தங்கச் சுரங்கங்களை நம்பியே இயங்குகிறது.
இந்தச் சுரங்கங்களில் ‘கச்சோரிரோ’ என்ற ஒரு விசித்திரமான மற்றும் கொடுமையான ஊதிய முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி, தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் 30 நாட்கள் எந்தவித சம்பளமும் இல்லாமல் இலவசமாக வேலை செய்ய வேண்டும். ஆனால், 31-வது நாளில் அவர்கள் சுரங்கத்திலிருந்து தங்களது தோள்களில் சுமந்து வரும் பாறைக் கற்களை அப்படியே சொந்தமாக்கிக் கொள்ளலாம். அந்தப் பாறையில் தங்கம் இருந்தால் அது அவர்களின் அதிர்ஷ்டம்; இல்லையென்றால் அந்த மாத உழைப்பு முற்றிலும் வீண்
சுரங்கத் தொழிலால் இந்த நகரம் பணக்கார நகரமாக இருந்தாலும், முறையான உள்கட்டமைப்பு இங்கு கிடையாது. கழிவுநீர் வசதி, தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி மக்கள் உறைபனிக்கு நடுவே மிகவும் நரக வேதனையான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.








