தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைய தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைந்தது. தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஒரு பிரிவினரும் அமமுக சட்டமன்ற உறுப்பினரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சி தாவல் பிரச்சனையை அதிமுக கொறடா எழுப்பிய போது 21 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைமைக்கு கடிதம் கொடுத்தனர். அதனால் அவர்களின் கட்சி தாவல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க அதிமுக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது. ஆனால் 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அடுத்து விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் குதிரை பேரம் நடந்துள்ளதாக கூறி நீதிமன்றம் சென்ற நிலையில் விராலிமலை தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளதால் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து ஆய்வு செய்யப்பட்டது. 15ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.







