புதுடெல்லி: தனியார் தொலைக்காட்சி சார்பில் நெக்ஸ்ட் என்ற பெயரில் டெல்லியில் நேற்று 3 நாள் மாநாடு தொடங்கியது. இதில் 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலக விநியோக சங்கிலி மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி செல்கிறது. உலகின் வளர்ச்சிக்கு நாங்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறோம். இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்தியா குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.
பின்லாந்து பிரதமர் அலெக்சாண்டர் அண்மையில் டெல்லிக்கு வருகை தந்தார். அவர் கூறும்போது, “உலகம் செல்ல வேண்டிய பாதையை தற்போது குளோபல் சவுத் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது” என்று தெரிவித்தார். குளோபல் சவுத் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பு நாடாக இந்தியா விளங்குகிறது. இதன்படி உலகின் பாதையை தீர்மானிப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.







