சென்னை மாவட்டம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் நேற்று புதன்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மது போதையில் ஒரு மர்ம நபர் அவரது வீட்டில் உள்ளே அத்துமீறி நுழைந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை எழுப்பி குடிக்க தண்ணீர் தருமாறு அந்த நபர் கூறினார். இதனை எதிர்பாராத அந்த பெண் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து சத்தம் போட்டார். இதனால் சுதாரித்து கொண்ட அந்த நபர் அந்தப் பெண்ணை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே, அந்த பெண்ணின் கணவர் காவல்துறையின் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்க பெண் சிறப்பு அதிரடி படை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பெண் அளித்த அங்க அடையாளங்களின் அடிப்படையில் அந்த பகுதியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ் ( 36 வயது) என்பவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த நபர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தொந்தரவு செய்ய முயன்ற நபரை புகார் கிடைத்த சுமார் 1 மணி நேரத்துக்குள் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல, பெரம்பூரில் பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து கேலி செய்த மூன்று இளைஞர்களை சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த படைக்காக பிரத்தியேகமான சீருடை, ரோந்த வாகனம், ட்ரோன் கேமராக்கள் மூலமாக ரோந்து பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த படையானது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே அறிந்து அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







