தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.
மேலும், அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார்.
இந்திய அரசியலமைப்பின் படி, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அல்லது புதிய அரசு பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அந்த வகையில், அரசின் கொள்கைகள், புதிய திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு தமிழக ஆளுநர் அர்லேக்கருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
கடந்த திமுக ஆட்சியில் கடைசி மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவில்லை என்று அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். மேலும், ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களுக்கு மாற்றாக தனது உரையை வாசித்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆளுநர் உரை முழுவதும் அப்போதைய சபாநாயகர் அப்பாவு வாசித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.






