சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டம் இன்று  நடைபெற உள்ளது.இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன்படி டெல்லிக்கு வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே சமயம் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய்யின், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக அரசின் தமிழக அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் காலியான மாநிலங்களவை இடமும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பின்னணியில் காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரங்கள், கூட்டணி உறவுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதே சமயம் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளின் போது, எதிர்கால தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழக கூட்டணி தொடரும் என இரு தரப்பும் தெரிவித்திருந்தன. இதன் அடிப்படையில், தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு, 2029 மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமையகமான அஜய் பவனில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜாவையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார். எனத் தகவல் வெளியாகியுள்ளது.