தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் 5ஜி சேவை..!

சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை தொடர்ந்து மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஓசூர், வேலூர் நகரங்களில் இன்று முதல் மக்கள் விரைவான 5ஜி சேவையை பெற முடியும். இந்த புதிய 5ஜி சேவையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம் 4ஜியை விட 5ஜி மூலம் மக்கள் மின்னல் வேகத்தில் சேவையை பெற முடியும்.

இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து சேவைகளும் மேம்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவை பொறுத்தமட்டில் தற்போது 4ஜி சேவை நடைமுறையில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாட்டில் 5ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 5ஜி சேவையை நாட்டில் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டியது.

இந்தியாவில் 5ஜி நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் எனவும் கணக்கிடப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 5ஜி சேவைகள் துவங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவை பொறுத்தமட்டில் ஜியோ நிறுவனம் அதிவேக ட்ரூ 5ஜி இணையச் சேவையைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தற்போது பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னையில் ஜியோ, ஏர்டெல் சார்பில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் மேலும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5ஜி சேவையை செயல்படுத்த ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.40,446 கோடி முதலீடு திட்டம் உள்ள நிலையில் 6 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் ஜியோ நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக 6 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ”இந்தியாவில் 5ஜி டெக்னாலஜி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இதனை துவக்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன். இதனை எப்படி கையாள போகிறோம் என்பதில் தான் சவால் உள்ளது. 5ஜி சேவை மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக உள்ளது. தொழில் வளர்ச்சியடையும். பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மீது பணியாற்றி வருகின்ற இம்மாநிலத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உத்வேகத்தை இது நிச்சயம் வழங்கும். புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும்” என்றார்.