தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 5 துணை ராணுவம் கோவை வருகை.!!

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து செல்வதற்காகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி. ஐ. எஸ். எப்). என்ற துணை ராணுவத்தினர் ஈடுபடுகிறார்கள்.தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக மேலும் 5 துணை ராணுவம் கோவைக்கு வருகை தர உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக கோவைக்கு 275 பேர் கொண்ட 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். அவர்கள் கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கோவைக்கு மேலும் கூடுதலாக 5 கம்பெனி துணை இராணுவத்தினர் இன்னும் 4 நாட்களில் கோவைக்கு வர வாய்ப்புள்ளது. அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் செய்யும் பணிநடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.