கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்..!

கோவையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,172 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவர்களில் 1,150 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளுடன் மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படுவதாக இருந்தது. இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட இடையீட்டு சேவை மையத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக ஊட்டச்சத்துடன் மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்ட 1,150 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்த பெட்டகத்தில் கேழ்வரகு – 600 கிராம், பொட்டுக்கடலை – 300 கிராம், நாட்டுச் சா்க்கரை – 300 கிராம், பேரிச்சம் பழம் – 200 கிராம், நெய் – 100 மில்லி அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துப் பொருள்களை எவ்வாறு உணவாக்கி அளிக்க வேண்டும் என்பது குறித்து குழந்தைகளின் தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக 854 குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தமாக 2,004 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
தொடர்ந்து மாதந்தோறும் ஊட்டச்சத்து தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.