கோவையில் கடந்த ஆண்டு 20 டன் போதை பொருட்கள் பறிமுதல் – போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 20 டன் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு 1532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1821 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 184 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தவிர 9 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 391 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் வாங்கப்பட்டது. அதை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் கடந்த 1-ந் தேதி முதல் தற்போது வரை 219 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 73 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கஞ்சா சாக்லேட் போதை மாத்திரை பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க ஒவ்வொரு போலீஸ் நிலைய உட்கோட்டஅளவில் தலா 8தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.